வழிகாட்டும் கலப்பை... அகத்தைப் பண்படுத்த...

ஆயரின் குரல்


நம் நாடு

பெருமையா அல்லது அவலமா?
   கிறித்தவனாக இந்தியாவில் பிறப்பது பெருமையா அல்லது அவலமா? கடவுள் படைத்தார் இவ்வையத்தை. ஆனால் அதைக் கூறு போட்டு வைத்திருக்கிறான் மனிதன். ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் சுதந்திரத்தோடு வாழ வேண்டும்; சகோதரத்துவமும் சமத்துவமும் அவனைத் தழுவ வேண்டும்; எந்த வேறுபாடும் இல்லாமல் அவன் மகிழ்வோடு வாழ வேண்டும்.
   ஆனால் சில நாள்களுக்கு முன்பு அருட்சகோதரி. வந்தனா, அருட்சகோதரி. பிரீத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்கள். அவர்களோடு செவிலியர் படிப்புக்காகச் சென்ற பெண்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.
   மற்றவர் வாயடைத்து அச்சத்தில் இவரது பன்மொழிப் புலமையும், பல பண்பாடுகளையும் இணைத்து பார்க்கும் திறமும், பலதரப்பட்ட எதிர்மறையான உலக நிலைகளை கவனத்துடன் கூர்ந்து நோக்கி அதற்குரிய நல்ல முடிவுகளை எடுக்கும் வழிமுறைகளை இவரால் நல்க முடியும்.

அச்சுறுத்தல்

  பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ அமைப்பின் ஒரு பகுதி அவர்களின் எல்லா தகவல்கள், குறிப்புகள், சான்றிதழ்களைப் பறித்துக்கொண்டு அவர்கள் ‘மனித கடத்தல்காரர்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாற்ற முனைகிறார்கள்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, எந்த மதிப்பும் மாண்பும் கொடுக்காது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி பயமுறுத்தி அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்குள் ஆளாக்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ‘நன்மை செய்வதற்குக் கிடைக்கும் பரிசா இது? யார் யாரெல்லாமோ கிறிஸ்தவ உடையை அணிந்தவர்களை வெகு இலகுவாக பொய்க் குற்றம் சுமத்துகின்றனர்.
   இதில் புரியாதது என்னவெனில் காவல்துறை மௌனிப்பது. எல்லாம் தெளிவாக இருந்தும், குற்றம் சாட்டும் குழுவோடு ஒத்துழைப்பதும், சட்டிஸ்கர் மாநில முதலமைச்சர் ஒத்துழைப்பது போல் பேசுவதும் நீதிக்குப் புறம்பாயுள்ளது.
   சிறுபான்மையினரைக் காக்க வேண்டியவர்கள். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியவர்கள் வாயடைத்து நிற்கையில் குற்றமற்றோரின் கதி என்ன? எல்லாம் நிரூபிக்கப்பட்டபின் எதையும் எடுத்துக் கொள்ளாமல் தண்டிப்பது நியாயமற்ற செயல்.
   இந்த அவல நிலையில் கிறிஸ்தவ ஆயர்கள், பெரியவர்கள் எனப் பலரும் இதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது கிறிஸ்தவர்களின் அச்சத்தின் மிக அவலமான நிலையைக் காட்டுகிறது. கேரளாவிலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது போற்றுதற்குரியது.

கிறித்தவத்தின் நிலைப்பாடு
   கத்தோலிக்கத் திருஅவையும் மற்ற கிறிஸ்தவர்களும் கல்வியில், உடல் நலனில், நீதியில், அமைதியில் கவனம் செலுத்துகின்றனர். இயேசுவின் அழைப்பே இதை வலியுறுத்துகிறது. அவர் எந்தச் சொத்தும், பதவியும், சமூக அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்கவில்லை, மாறாக பணிவும், பணியும், சிலுவையும் தான் அவர்களது சன்மானம். ஆனால் இதற்காக எத்தனையோ கோடி பேர் அகிலத்திலும், ஏன் இந்தியாவிலும் தவம் கிடக்கிறார்கள். இயேசுவின் கனவான இறையாட்சியை நிறுவுவது கிறிஸ்தவர்களின் நோக்கம். இந்த இறையாட்சியில் நீதி, அன்பு, மகிழ்வு, சகோதரம், அமைதி போன்ற சிறந்த பண்புகள் நிலவும்.
   அநியாயம் நடந்தால், அது முதலாளித்துவத்தையும் கம்யூனிசத்தையும் மற்ற தத்துவங்களையும் எதிர்க்கும். இதற்காகவே எண்ணற்றோர் இன்றும் தங்களின் உயிரைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

மன்னிப்பின் மகத்துவம்
   கிறிஸ்தவர்களின் மற்றொரு பண்பு மன்னிப்பு. அவர்கள் வன்முறையாக மனிதரைக் கொல்வோரை, ஏழைகளை வஞ்சிப்போரை, போலித்தனமுடையவரை ஏற்பதில்லை. இதை எதிர்த்துப் போராடுவர். கொல்பவனையும் மன்னிப்பவர். தொழுநோயாளரைக் கவனித்து வந்த மதிப்பிற்குரிய ஸ்டெய்னை அவர்தம் இரண்டு மகன்களோடு சுட்டு எரித்துக் கொன்றனர். அவர்களை மனதார மன்னித்து விட்டார் அவர்தம் மனைவி.
   அருட்சகோதரி ராணி மரியா பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். கூலிப்படையால் அனுப்பப்பட்ட அந்தக் கொலையாளியை அந்தக் குடும்பமே மன்னித்துவிட்டது. மன்னிப்பை பலவீனமாக எண்ண வேண்டாம். அது தான் தெய்வீகம். தெய்வீகத்தை பலவீனமென்று சொல்வதுண்டோ‚ தந்தை ஸ்டேன் சுவாமியைத் தேசத்துரோகி என பொய்க் குற்றம் சாட்டி பல கொடிய வேதனைகளைத் தந்து சாகடித்தது என்ன நியாயம்?
   அநியாயங்கள் தலைவிரித்தடும் இந்த வேளையில் அரசாங்கத் தேர்தல் ஆணையம் செய்து வருவது மிக வருந்தத்தக்கது. ஓட்டுகளை மோசடி செய்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராவது ஜனநாயகத்தை மோசடி செய்வதாகும். குற்றச்சாட்டுகள் தெளிவாக விளக்கப்படும்போது அதை ஏற்க மறுப்பதும் தவற்றை சுட்டிக்காட்டியவரை எந்த வகையில் சிக்கலில் மாட்ட வைக்கலாம் என்பதும் ஜனநாயகத்திற்குப் புறம்பானது. நீதியையும், கொடுக்கப்பட்ட பணியையும் செய்பவர்கள் அறநிலை நின்று செய்வது மிக மிக நல்லது. நடுநிலை, ஜனநாயக நிலை அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் போது பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நமது நாடு வளம் பெறுவது ‘எல்லாரும் எல்லாமும் பெறும் போதுதான்” அதையும் அரசு கவனித்தல் நல்லது.

நம் நாடும் இதைப் பின்பற்றுமா?
   நேற்று ஓர் இதயம் தொடும் நிகழ்ச்சி நடந்தது. நன்றாகப் பாடும் இளம் பெண் ஒருவர் எல்லாராலும் பாராட்டப்படுகிறாள். ஆனால் அவள் தந்தை அவளைப் பாராட்டுவதில்லை; உற்சாகம் தருவதுமில்லை. இது அவளுக்கு ஒரு மனக் காயமாக இருந்தது. இதை வெளிப்படையாகப் பெற்றோர் இருக்கும்போதே அந்தப் பெண் வெளிப்படுத்துகிறார். எனது அப்பாவால் ‘பாராட்டப்பட்டு, கட்டித் தழுவும்” அந்த நேரத்தை எதிர்பார்க்கிறேன் என்ற பொழுது. தந்தை தன் மகளின் காலில் விழுந்தார்; மகள் இதை எதிர்பார்க்கவில்லை. அப்பா தனது காலில் விழுந்தது அவ்விளம் பெண்ணிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்வதறியாது நின்ற நங்கை அப்பாவைக் கட்டியணைத்துக் கொண்டாள். இச்செயல் பார்ப்பவர் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. தவற்றை உணர்ந்து செயல்படுபவர் குட்டிக் கடவுள். நம் நாடும் இதைப் பின்பற்றுமா? இளைஞர்கள் அணிதிரண்டு முன்வந்துவிட்டால் நம் நாட்டில் நலம் பொங்கும்! நன்மையே தங்கும்! புதுமையே எங்கும்!

நாட்டுக்காக உழைப்போம்; ஜெபிப்போம்!