"இறை அன்பால் உலகை வென்றிட"
ம. நிஷோக் சேவியர் ராஜ், இலங்கநாதபுரம்
மனித வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் அன்பில் வாழ்வதே. ஆனால், இறைவனின் அன்பு மனித அன்பைப் போன்றதன்று. இறையன்புக்குச் சாட்சி இயேசு கிறிஸ்துவின் வாழ்வாகும்.
இறையன்பின் தனிச்சிறப்புகள்
நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் அன்பில் ஐந்து முதன்மையான விழுமியங்கள் காணப்படுகின்றன: 1. தியாகம், 2. சமத்துவம், 3. பொறுமை, 4. பகிர்வு 5. நேர்மை
இவை அனைத்தும் ஒருங்கிணைந்ததே இறைவனின் நிறை அன்பாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவருடைய சிலுவைச் சாவு இறையன்பின் உன்னத வெளிப்பாடு.
இறை அன்பால் உலகை வெல்வது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுத்திருந்த இரண்டு முதன்மைக் கட்டளைகளுள் இரண்டாம் கட்டளை: 'உன் மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக‚"
ஆனால், நாம் அன்பு செய்பவர்கள் பெரும்பாலும் நம்மை அன்பு செய்கிறவர்களே.
ஆனால், இறைவன் சொல்வது : நம்மை வெறுப்பவர்களையும், அழிக்க நினைப்பவர்களையும், நமக்கு எதிராக நிற்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதாகும்.
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து, 'ஒருவர் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு" என்று கூறியது இறையன்பின் வெளிப்பாடு.
அதைவிடவும் பேரன்பு, துன்புறுத்துபவர்களுக்காக மன்றாடுவது ஆகும். சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது நம் ஆண்டவர் இரு கரம் நீட்டி நம்மிடம் கேட்டார்:
'உனக்காக நான் இறந்தேனே; எனக்காக நீ என்ன செய்தாய்...?" இதற்கு நாம் தர வேண்டிய மறுமொழி, இறையன்பைப் பிறருடன் பகிர்ந்து சான்றாக வாழ்வதே.
அதற்காக, இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் வெளிப்பட்ட அந்த ஐந்து விழுமியங்களையும் நமது வாழ்வில் நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும்.
பாவத்திலிருந்து மீட்கும் இறையன்பு
நமது வாழ்க்கையில் சில நேரங்களில், நெருங்கிய உறவுகளின் அன்பைக் கூட புறக்கணித்து, பாவச் செயல்களில் ஈடுபடுகிறோம். அவ்வாறு செய்யும் பொழுது, இறைவனின் அன்பையும் புறக்கணிக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
பாவத்திலிருந்து மீள வேண்டும் என்றால், இறையன்பைக் காயப்படுத்தாத உறுதியை எடுக்க வேண்டும்.
நம் வாழ்வில் இறையன்பினை நடைமுறைப்படுத்திட அடிப்படைக் கூறுகள்:
• இறையன்பை முதலில் குடும்பங்களில் பகிர்ந்து வாழ வேண்டும்.
• சமூகத்தில் ஒற்றுமையோடும், நல்லமைதியோடும் வாழ வேண்டும்.
• வறியவர்களின் வாழ்வில் சேவை செய்ய வேண்டும்.
• துன்புறுவோருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்.
• அனைவருக்காகவும் அன்றாடம் மன்றாட வேண்டும்.
• பிறர் முன்னேறுவதற்கு அன்புடன் வாழ்த்தி ஊக்கப்படுத்த வேண்டும்.
நிறைவாக
உலகை வெல்ல வேண்டிய ஆயுதம் வாள் அல்ல; ‘இறையன்பு மட்டுமே போதுமானது”. இதற்குச் சான்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை இறப்பு.
ஒவ்வொருவரும் இறையன்பை நடைமுறையில் கடைப்பிடித்தால், உலகமே மாறி விடும்.
மகனுடன் உயர்வு பெரும் தந்தையை நம்பி தன்னுயிர் தந்த இயேசுவின் அன்பில் இணைந்து பயணிப்போம் வாரீர்‚
நம்பிக்கை எதிர்நோக்கு அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. (1 கொரிந்தியர் 13:13)