வழிகாட்டும் கலப்பை... அகத்தைப் பண்படுத்த...

அகமகிழும் அன்னைத் திருஅவை (கடந்த இதழின் தொடர்ச்சி...)

அருள்பணி. க.செ. பிரவீன் ராசு

13. திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும் பற்றிய விதித் தொகுப்பு
   நடுக்காலத்திற்குப் பின், சிறப்பாக சீர்திருத்தக் காலத்தில் திருப்பணியாளர்களின் பணி ஆகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. திருப்பீடத்தில் நின்று திருவழிபாட்டை நடத்துவதும், அருளடையாளங்களை வழங்குவதும் மட்டுமே அவர்களது பணியாகப் பார்க்கப்பட்டன. உலகிலிருந்தும், மக்களிடமிருந்தும் முழுமையாக விலகியும், சமூகத்தில் மரியாதையையும், வசதிகளையும் நுகரும் வகையிலும் அவர்களது வாழ்வு இருந்தது. இச்சூழலில் திருப்பணியாளர்களின் பணி பற்றிய ஏடு ஒன்று உருவாக்கப்பட்டு 1964 அக்டோபர் 13 முதல் 15 வரை விவாதிக்கப்பட்டது. பின்னர் அவ்வேடு மாற்றப்பட்டு புதிய ஏடு 1965 அக்டோபர் 14 முதல் 26 வரை விவாதிக்கப்பட்டது. நவம்பர் 12, 13 ஆகிய நாள்களில் முதல் வாக்கெடுப்பும், திசம்பர் 2 அன்று மாற்றங்களின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, திசம்பர் 4 அன்று நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் 2390 ஆதரவு மற்றும் 4 எதிர்ப்பு வாக்குகளுடன் இவ்வேடு பிரகடனம் செய்யப்பட்டது.

    குரு, அடிப்படையில் பணியாளர் என்ற கருத்தை ஆழமாக விதைத்தது இவ்வேடு. திருப்பணியாளர் முழுமையான மனிதராக, உலகிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிவிடாமல் வாழ இவ்வேடு வலியுறுத்தியது. தம்மிடமுள்ள மக்களின் தலைவராக திருப்பணியாளர் ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளையும் இவ்வேடு வலியுறுத்தியது. சிறப்பாக, கீழைத்திருஅவைகளின் திருமணமான திருப்பணியாளர்கள் மக்கள்மீது கொண்டிருந்த கடமைகளை இவ்வேடு அதிகம் வலியுறுத்தியது.

14. கிறித்தவக் கல்வி பற்றிய அறிக்கை
    பல உலகநாடுகளில் நடைமுறைக்கு வந்த கட்டாயப் பொதுக்கல்வி முறை கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் பல சிக்கல்களை உருவாக்கியது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த கிறித்தவ நிறுவனங்கள் பிற நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் திண்டாடி வந்தன. மேலும் கிறித்தவக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் பலதரப்பட்ட சிந்தனைகளை ஊக்குவிக்காமல், உண்மையைப் பாதுகாப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தன. இந்நிலையில், கிறித்தவக் கல்வி பற்றிய அறிக்கையானது உருவாக்கப்பட்டு 1964 நவம்பர் 17, 18, 19 ஆகிய நாள்களில் விவாதிக்கப்பட்டது. நவம்பர் 19 அன்று நடைபெற்ற முதல் வாக்கெடுப்பு, 1965 அக்டோபர் 13, 14 ஆகிய நாள்களில் நடைபெற்ற திருத்தங்களின் மீதான வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குப் பின், அக்டோபர் 28 அன்று நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் 2290 ஆதரவு, மற்றும் 35 எதிர்ப்பு வாக்குகளோடு இவ்வேடு பிரகடனம் செய்யப்பட்டது.

    குழந்தைகளின் கல்வி மீது பெற்றோர் கொண்டிருக்கும் கடமைகள் வலியுறுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்களை நடத்தும் திருஅவையின் உரிமையையும் இவ்வேடு வலியுறுத்திப் பேசியது. அதே வேளையில், மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதும், கத்தோலிக்கரல்லாத மாணவர்களை ஏற்றுக்கொள்வதும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் கடமை என்பதை இவ்வேடு சுட்டிக்காட்டியது. கத்தோலிக்கரல்லாத பிறரால் நடத்தப்படும் கத்தோலிக்க மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய மறைக்கல்வி வகுப்புகளை நடத்துவதையும் இவ்வேடு வலியுறுத்தியது.

15. கிறித்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிய அறிக்கை
    உலகம் முழுவதும் மறைபரப்புப் பணியாற்றி வந்த கத்தோலிக்கத் துறவியர் பிறமதங்களைப் பற்றிய ஒரு தவறான மனநிலையைக் கொண்டிருந்தனர். மதமாற்றமே மறைபரப்புப் பணியின் முக்கிய இலக்காகப் பார்க்கப்பட்டதால் பிறமதங்கள் அனைத்துமே எதிர்மறையாகப் பார்க்கப்பட்டன. திருஅவையோடு போர்புரிந்த இசுலாமியர்கள், யூதர்கள் போன்றோரும் இதே மனநிலையோடு அணுகப்பட்டனர். இம்மனநிலையைக் களைய ஏதுவாக, பிறசமயங்களுடனான உறவு குறித்த சிற்றேடு ஒன்று உருவாக்கப்பட்டது. தற்போதைய கிறித்தவ ஒன்றிப்பு ஏட்டின் நான்காம் இயலாக உள்ள அச்சிற்றேடு 1963 நவம்பர் 18 முதல் 21 வரை விவாதிக்கப்பட்டது. அத்துடன் இணைப்பாக யூதர்கள் மற்றும் பிறசமயத்தார் பற்றிய ஏடு ஒன்று உருவாக்கப்பட்டு 1964 செப்டம்பர் 28, 29, 30 ஆகிய நாள்களில் விவாதிக்கப்பட்டது. நவம்பர் 10 அன்று முதல் வாக்கெடுப்பும், 1965 அக்டோபர் 14, 15 ஆகிய நாள்களில் திருத்தங்களின் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றபின், அக்டோபர் 24 அன்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இவ்வேடு பிரகடனம் செய்யப்பட்டது. 2221 சங்கத் தந்தையரின் ஆதரவும் 88 பேரின் எதிர்ப்பும் இறுதி வாக்கெடுப்பின்போது பதிவு செய்யப்பட்டன.

    கிறிஸ்து வழியாக கடவுள் திருஅவையில் முழுமையாக வெளிப்படுவதை வலியுறுத்தினாலும், எல்லாச் சமயங்களிலும் கடவுளின் செயல்பாடு இருப்பதை இவ்வேடு ஏற்றுக்கொண்டது. எனவே எல்லாச் சமயங்களையும் மதிப்புடன் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை இக்கருத்து உருவாக்கியது. இயேசுவையும் இறைவாக்கினர்களையும் ஏற்பதால் இசுலாம் சமயத்தோடும், பழைய ஏற்பாட்டை ஏற்பதால் யூத சமயத்தோடும் திருஅவை நெருக்கமாக உறவு கொண்டிருப்பதை இவ்வேடு விளக்கியது. இவ்வாறு யூத சமயம் என்றாலே இயேசுவைக் கொன்ற சமயம் எனக் கருதப்பட்ட எதிர்மறைப்பார்வையை சங்கம் ஏற்கவில்லை. யூத எதிர்ப்பு மனநிலையை போதனைகளிலிருந்தும் பாடங்களிலிருந்தும் முற்றிலுமாக அகற்ற வலியுறுத்திய இவ்வேடு, இவர்களுடனான பொது விவிலியப் பாடமுறைகளையும் ஊக்குவித்தது.

16. சமயச் சுதந்திரம் பற்றிய அறிக்கை
   சமயச் சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் உருவானது என்றும் இதனால் அது மனித உரிமையன்று என்றும் திருஅவை எண்ணி வந்தது. உண்மைக்கு மட்டுமே உரிமை உண்டு எனப் போதித்தும் வந்தது. கத்தோலிக்கத் திருஅவை சிறுபான்மையாக இருந்த இடங்களில் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்தினாலும், பெரும்பான்மையாக இருந்த இடங்களில் அதனை முடக்கும் விதமாகவே திருஅவையின் செயல்பாடுகள் இருந்தன. இந்நிலையில் உருவான இவ்வேட்டின் முதல் வடிவம் (தற்போதைய கிறித்தவ ஒன்றிப்பு ஏட்டின் ஐந்தாம் இயல்) 1963 நவம்பர் 18 முதல் 21 வரை விவாதிக்கப்பட்டது. அதன் இணைப்பு அறிக்கை 1964 செப்டம்பர் 23 முதல் 28 வரை விவாதிக்கப்பட்டது. முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட புதிய அறிக்கை 1965 செப்டம்பர் 15 முதல் 22 வரை விவாதிக்கப்பட்டு, அக்டோபர் 26, 27 ஆகிய நாள்களில் முதல் வாக்கெடுப்பும், நவம்பர் 19 அன்று இரண்டாம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டன. திசம்பர் 7 அன்று நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் 2308 பேரின் ஆதரவு மற்றும் 70 பேரின் எதிர்ப்பு வாக்குகளுடன் இவ்வேடு பிரகடனம் செய்யப்பட்டது.

   மனிதர்கள் அனைவருக்குமே தாங்கள் விரும்பிய சமயத்தைத் தனியாகவோ, குழுவாகவோ, பொதுவாகவோ கடைப்பிடிக்க உரிமை உண்டு என்பதை இவ்வேடு தெளிவுபடுத்தியது. எனவே சமயத்தின் பெயரால் எவரும் எவரையும் ஒடுக்கக்கூடாது என வலியுறுத்திய இவ்வேடு, இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசு, திருஅவை, சமூகம் என அனைவருக்குமே உண்டு என விளக்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தால் ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட சமயம் சிறப்பு பெற்றிருந்தாலும், அச்சிறப்பு அதே இடத்தில் வாழும் மக்கள் பிற சமயங்களைச் சார்ந்திருப்பதைத் தடைசெய்யக்கூடாது என இவ்வேடு கற்பித்தது.