சான்று பகரும் இளைஞர்களே இயேசுவின் சீடர்கள்
அன்பிற்கினிய கலப்பை படிப்பாளர்களே, படைப்பாளர்களே ஆண் பெண் இளைஞர்களே, அவர்கள்தம் அன்புப் பெற்றோரே ஆசிரியப் பெருமக்களே, ஏழையர்தம் அன்பைப் பெற்றோரே,
அதன் விளைச்சலாக இறைவனின் அருளைப் பெற்றோரே வணக்கம்‚ அன்னை மரியாவின் பிறந்த நாள் (செப் 8) விழா நல்வாழ்த்துகள்!
நன்று நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே‚ சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். (மத் 25:21) இயேசு சொல்லும் இந்தப் பாராட்டு ஊக்க மொழிகளை இளைஞர்;
இயக்க உறுப்பினர்களும் பொறுப்புகளில் உள்ளோரும் ஆசிரியர்களும், பெறுவதற்குத் தகுதியைப் பெருக்கிக் கொள்ள அழைக்கப் பெறுகிறார்கள். செப்டம்பர் 05, அன்னை தெரசாவின் நினைவு நாள்; பள்ளி ஆசிரியர் பணியைத் தொடக்கத்தில் ஏற்றிருந்த தெரசா, தன் வாழ்வுப் பணியால் இயேசுவின் சீடத்தியாய், நல்லாசிரியாராய,;
சான்று பகரும் பெண் இளைஞராய்த் திகழ்ந்தார்; பார் போற்றும் அன்னை தெரசாவாய் புனிதையானார்.
‘கற்றுக் கொடு‚ போராடு‚ ஒன்று சேர்” என்னும் முழக்கத்தைக் கற்றுத் தந்த பேரறிவர் அம்பேத்கார் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்க‚” என்று அறைகூவல் விடுத்த பேராசான் கார்ல் மார்க்ஸ், ‘மானமும் அறிவும் மாந்தருக்கு அழகு” என்று அறிவுருத்திய தந்தை பெரியார்,
தன் சொத்துகளை எல்லாம் ஈகம் செய்து, ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனார், ‘அறிவை விரிவு செய்‚ அகண்டமாக்கு‚ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை‚”
என்று எழுதிய பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர், சான்றோரும், இயேசுவின் சீடர்களும், உள்ளத்தால் என்றும் சான்று பகரும் இளைஞர்களும் ஆவர்.
சொன்னவுடன் கேட்டுச் செயல்படுவோர் உயர்ந்தோர். அவர்களே அன்னை மரியா, தந்தை வளனார் ஆகியோரின் உண்மையான வழித்தோன்றல்கள். கரும்பைப் பிழிவது போல் பிழிந்தால் மட்டுமே கேட்போர் இழிந்தோர்;
அவர்கள், உண்மையா அது என்ன என்று கேட்ட பிலாத்து, ஹிட்லர், முசோலினி போன்றோரின் வாரிசுகள் ஆவர்.
சான்று பகரும் எண்ணம் கொள்ளும் இளைஞர்கள் இயல்பாகவே, சொல்லப்பட்டவுடனே, தெரிந்தவுடனே பயன்பாடுள்ள செயல்களில் இறங்கிவிட வேண்டும்.
கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிறது இறைமொழி; வழிகாட்டும் கலப்பையின் இன்மொழி
எண்ணியவர் செயலில் உறுதியுடைவராய் இருந்தால், தாம் எண்ணியதை எண்ணயவாறே அடைந்திடுவார்.
இவ்வகையில் தொடர்ச்சியாய் இயங்கும் இளைஞர்கள் இயேசுவின் சீடர்களாகச் சான்று பகர்ந்து உயர்ந்து நிற்க, இறையாட்சியைக் கற்க இயலும்!
இதைச் செம்மையாய்ச் செயல்படுத்த விரும்புவோர் சான்று பகரும் இளைஞர்கள். இவர்கள் இயேசுவை ஆண்டவராக ஏற்று அறிக்கையிடாமல்கூட இருந்திருக்கலாம்; ஆனால்
இவர்கள் வாழ்ந்துகாட்டி அறிக்கையிட்ட பலவும் இயேசுவின் கொள்கையோடு இணைந்து செல்லக் கூடியவையே. சான்றுபகரும் இளைஞர்களும் இளைஞர் இயக்கமும் வாழ்க!