இளைய தலைமுறை புதிய சமூக மாற்றத்திற்கான விதை
அருள்பணி. சேசுராஜ் இ.ஞா., இளைஞர் பணிக்குழுச் செயலர்
ஆற்றல்மிகு இளைய தலைமுறையே!
கடந்த ஆகஸ்ட் மாதம், முதல் ஞாயிறு இளைஞர் ஞாயிறாகக் கொண்டாடப்பட்ட சூழலில் நம் மறைமாவட்ட தென்மறைமண்டலக் கலப்பை இதழ் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பேரானந்தம்.
நம் தாய்த்திரு அவையில் இளைஞர் பணிக்குழு என்பது இளம் மாணாக்கர்களையும். இளைஞர்களையும் உள்ளடக்கியதாக செயல்படக் காரணம் நம் இளைய தலைமுறை சரியான உருவாக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் போது
அவர்கள் இச்சமூகத்தின் மாற்றத்தை முன்னெடுப்பவர்களாக உருமாறுவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே தான் அவர்களை புதிய மாற்றத்திற்கான விதையாக நாம் பார்க்கிறோம்.
ஒரு விதையை நாம் முளைக்கச் செய்ய, அதனை மண்ணில் ஊன்றி, அதற்குத் தேவையான தண்ணீர் ஊற்றி, உரம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கொடுத்து, ஆடு மாடுகள் அதனை மேய்ந்து விடாமல் பராமரிக்கின்றோம்.
அது போலவே இன்றைய இளைய தலைமுறையை நற்பண்புகள் எனும் தண்ணீர் விட்டு, சமூக மதிப்பீடுகள் எனும் உரமிட்டு. சமூக ஊடகங்கள், சாதி, போதை போன்ற ஆடு மாடுகள்
தீண்ட விடாமல் நாம் பராமரிக்கும் போது பாழ்பட்ட இந்தச் சமூகம், மாற்றம் பெற்ற புதிய சமூகமாக உருவெடுக்கும். அதற்கான முயற்சிதான் நம் பங்குகளிலும், நம் பள்ளிகளிலும் நம் இளம் மாணக்கர்களிடையே முன்னெடுக்கப்படுகின்றது.
நாம் வாழும் இன்றைய சமூகம்
நான் ஒவ்வொரு மாதமும் நம் கத்தோலிக்கப் பள்ளிகளில் உள்ள இளம் மாணாக்கர் இயக்கத்தைச் சந்திக்கச் செல்கின்ற போது அவர்களிடம் கேட்கும் கேள்வி –
“நீங்கள் வாழும் இந்தச் சமூகம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்பது தான். அக்கேள்விக்கு ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் விடை “இல்லை” என்பது தான்.
நாங்கள் வாழும் இந்தச் சமூகம் நோய் பிடித்த சமூகமாக இருக்கிறது. சாதி என்னும் நோய், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு நோய், போதையினால் தடுமாறும் நோய், சமூகக் குற்றங்களால் உருக்குலைக்கும் நோய்,
ஊழலால் வளர்ச்சி குன்றவைக்கும் நோய், மதத்தால் வேறுபடுத்தும் நோய். இத்தகைய நோய் பிடித்த சமூகம் எங்களுக்கு வேண்டாம் என்பதே அவர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.
அப்படியென்றால் நீங்கள் கனவு காணும் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்களின் விடைகள் :
• மதம் கடந்து மனித நேயம் வளர்ச்சிக்கும் சமூகம் சாதி மறுத்து அனைவரையும் சமமாக நடத்துகின்ற சமத்துவ சமூகம்.
• போதை என்னும் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுபட்ட சமூகம்.
• ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம்.
• சமூகக் குற்றங்கள் இல்லாத சமூகம்.
• பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சமூகம்.
• விபத்தில்லா சமூகம்.
• இயற்கையைப் பேணும் சமூகம்.
• தூய்மையான சமூகம்.
• ஊழலற்ற சமூகம்.
அவர்களின் இந்த ஒவ்வொரு பதிலும் அவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இத்தகைய சமூகத்தை உருவாக்குவது அல்லது இன்றைய சமூகத்தை மாற்றுவது சாத்தியமா என்பது நமக்கு முன் நிற்கின்ற சவாலாக உள்ளது.
நாம் கனவு காணும் அழகிய சமூகமாக இன்றைய சமூகத்தை மாற்ற வேண்டுமென்றால் அந்த மாற்றம் தனி மனிதனிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும், தான் இந்தச் சமூகத்தின் அங்கம் என்பதை நம் இளைய தலைமுறை மறந்து விடக் கூடாது. எனவே தான்,
நம் இளம் மாணாக்கர் இயக்கதின் இலக்காக ‘தன்னை உருவாக்கி பிறரையும் உருவாக்கி ஒரு புதிய சமூதாயம் படைத்தல்” என முன் வைக்கின்றோம்.
நம் இளம் தலைமுறையனருக்கு நாம் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமை அவர்களை புதிய சமூக மாற்றத்திற்கான விதைகளாக உருவாக்குவது தான்.
அதற்கான முயற்சிதான் நம் பங்குகளிலும், பள்ளிகளிலும் தொடர் உருவாக்கப் பயிற்சியாகக் கொடுக்கப்படுகின்றது.
நம் இளைய தலைமுறையினரின் உருவாக்கம் ஐந்து தளங்களில் நடைபெறுகின்ற போது அவர்கள் புதிய சமூக மாற்றத்தின் விதைகளாக மாறுகிறார்கள்.
• அறிவு உருவாக்கம்.
• மதிப்பீட்டு உருவாக்கம்.
• ஆளுமை உருவாக்கம்.
• உடல் உறுதி உருவாக்கம்.
• சமூக அக்கறை உருவாக்கம்.
இந்த ஐந்து வகையான உருவாக்கத்திலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், திருஅவையின் பொறுப்பாளர்கள் ஆகியோரது பங்களிப்பு மிகமிக முக்கியமானது.
1. அறிவு உருவாக்கம்
அறிவு உருவாக்கம் என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமன்று, மாறாக,
நம் இளம் மாணாக்கர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்கும் ‘இலக்கு நோக்கிய பயணம், விமர்சனப் பார்வை, புதுப்படைப்பாற்றல்” இவற்றை வளர்த்து அறிவைப் பெருக்குவது ஆகும்.
2. மதிப்பீட்டு உருவாக்கம்
கல்வியோடு இணைந்து ஒழுக்கம், நற்பண்புகள், சமூக மதிப்பீடுகளைப் பின்பற்றுகிற போது நம் இளைய தலைமுறையினர் இந்தச் சமூகத்தின் பொறுப்புள்ள குடிமகன்களாக உருவெடுக்கிறார்கள்.
நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுகிற போது சமூக குற்றமில்லா சமூகத்தையும், சாலை விதிகளைப் பின்பற்றுகிற போது விபத்தில்லா சமூகத்தையும் நம் பிள்ளைகள் உருவாக்குகிறார்கள்.
3. ஆளுமை உருவாக்கம்
முழுமனித ஆளுமை என்பது எனக்கான அடையாளத்தை நானே உருவாக்குவது என்பதை நம் இளைய தலைமுறையினருக்கு ஆழமாகப் பதிய வைப்பதாகும். ஆட்டு மந்தை மனநிலை இல்லாமல், பத்தோடு பதினொன்று என்ற வாழ்க்கை இல்லாமல்,
தனக்கான தனித்துவத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொண்டு அதன் வழியாக இச்சமூகத்திற்கு கடமையாற்ற நம் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
4. உடல் உறுதி உருவாக்கம்
இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ள நிலையில் நம் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளவும், விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சியின்
முக்கியத்துவத்தை, பள்ளிப் பருவத்திலேயே உணர்த்தி உறுதியான உடலோடு சமூகத்தைத் தாங்கி நிற்கவும் அவர்களை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
5. சமூக அக்கறையில் உருவாக்கம்
அடுத்திருப்பவரைப் பற்றிய அக்கறையற்ற சமூகமாக இன்றைய சமுதாயம் உருவாகி வருகின்றது. எதைச் செய்தாலும் அதனால் எனக்கு என்ன லாபம் என்ற மனநிலை வெகுவாக மக்களிடம் பரவி வருகின்றது.
இது மாற வேண்டுமென்றால் பள்ளிப்பருவத்திலேயே நம் இளைய தலைமுறையினரிடம் அடுத்தவரைப் பற்றிய அக்கறை நமது சமூகக் கடமை என்பதைக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் துணிவுடனும், அரசியல் விழிப்புணர்வுடனும் உருவாக்கப்பட வேண்டும்.
இத்தகைய உருவாக்கம் தான் நாளைய தலைவர்களாக நம் இளையவர்களை மாற்றும்.
இத்தகைய 5 தளங்களில் நம் இளைஞர்களையும், இளம் மாணாக்கர்களையும் நாம் உருவாக்கும் போது இன்றைய சீரழிந்த சமூகம் கண்டிப்பாகக்
கேள்விக்குட்படுத்தப்பட்டு அதனை மாற்றும் விதைகளாக அவர்கள் உருமாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்தியத் துணைக்கண்டத்திலே அதிகமான விழுக்காட்டில் இளைஞர்கள் தான் உள்ளனர். இது நமக்கு மிகப்பெரிய வரம். இளைஞர்களின் சீரிய சிந்தனையும், புயல் வேகமும், செயல் விவேகமும்,
அறிவுக் கூர்மையும், நுணுக்கமான அறிவியல் அனுபவங்களும் எப்படி நம் நாட்டில் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் நம் இளைஞர்கள் மற்றும் இளம் மாணாக்கர்கள் சாதனைகளின் அடையாளம், பகுத்தறிவுப் போராட்டத்தின் அடையாளம், ஆற்றலின் அடையாளம். எனவே, அவர்களுக்கு சரியான பருவத்தில் சரியான
உருவாக்கத்தை, பெற்றோர், ஆசிரியர்கள், திருஅவை பொறுப்பாளர்கள் ஆகியோர் கொடுக்கும் போது நாளைய சமூகம் நலமிகு சமூகமாக, அனைத்து உயிர்களும் சமன்மையோடு வாழும் சமூகமாக,
மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டான சமூகமாக உருவாக்கும் விதைகளாக அவர்கள் முன் நிற்பார்கள்.
திருஅவையிலும் நம் சமூகத்திலும் அவர்களை வளர்த்தெடுப்போம் நாளைய திருஅவையையும், சமூகத்தையும் இளைய தலைமுறையினர் சிறப்பாக எடுத்துச் செல்வார்கள்.